கோத்தபாய வந்ததும் உம்மை தூக்குவேன் - யாழில் சுகாதார பரிசோதகரை அச்சுறுத்திய ஈ.பி.டி.பி உறுப்பினர்!

கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும் உம்மைத் தூக்குவேன் என்று கரவெட்டி பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர், பொது சுகாதார பரிசோதகரை அச்சுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, குறித்த ஈ.பி.டி.பி உறுப்பினர், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கொற்றவத்தை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக்கம் தொடர்பில் சோதனை செய்வதற்கு கரவெட்டி பிரதேச சபை பொதுச் சுகாதார பரிசோதகர் நேற்றுமுன்தினம் அங்கு சென்றுள்ளார்.

அதன்போது அவரை கடமையைச் செய்ய விடாது கரவெட்டி பிரதேச சபையின் ஈபிடிபி உறுப்பினர் இடையூறு விளைவித்துள்ளார்.

அத்துடன் ஒரு கட்டத்தில் கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும் உம்மைத் தூக்குவேன் என அவர் சுகாதார பரிசோதகரை எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகரால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டதை அடுத்து , குறித்த பிரதேச சபை உறுப்பினரை அழைத்து விசாரித்த பொலிஸார், அவரைக் கைது செய்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த பருத்தித்துறை நீதிவான், பிரதேச சபை உறுப்பினரை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவித்ததோடு வழக்கு விசாரணை ஒத்திவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.