யாழ் சா்வதேச விமான நிலைய சேவையை ஆரம்பிக்க இலங்கையின் முன்னனி விமான நிறுவனம் ஆர்வம்!

யாழ் சா்வதேச விமான நிலையத்திலிருந்து விமானசேவைகளை நடாத்துவதற்கு தேவையான பணிகளை தாமும் மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் குழு தலைமை நிறைவேற்று அதிகாரி விபுல குணதிலக தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் அடுத்த ஆண்டுக்குள் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு விமான சேவைகளை ஆரம்பிக்க முடியும் என தாம் நம்புவதாக கூறிய அவர், அதற்காக, சிறிய விமானங்களை குத்தகைக்குப் பெறுவது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சில நகரங்களுக்கு விமானங்களை இயக்கும் போது, யாழ்ப்பாணத்தின் ஊடாக சேவையை நடத்தும் திட்டமும் தங்களிடம் உள்ளதாக கூறிய அவர், இது கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு இடையே நல்ல இணைப்பை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் ஒரு அனைத்துலக விமான நிலையத்தைத் திறப்பது இப்பகுதியில் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்றும் தேசிய விமான நிறுவனமான சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானங்களை இயக்குவதன் மூலம்,

இந்த முயற்சிகளுக்கு உதவ முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தங்களிடம் தற்போது, யாழ்ப்பாணத்துக்கு இயக்கக் கூடிய விமானங்கள் இல்லை என்றும், எனவே அடுத்த ஆண்டு இந்த சேவையைத் தொடங்குவதற்குப் பொருத்தமான விமானத்தை குத்தகைக்குப் பெறுவதற்கு தாம் முற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.