மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுபணிகள்- எச்சரித்த இராணுவம்

அம்பாறை கஞ்சிச்குடிசாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பிரதேசமக்கள் இன்று காலை முதல் சிரமதான பணிகளை முன்னெடுத்தபோது அங்கு சென்ற இராணுவத்தினர், துயிலும் இல்ல துப்பரவு பணிகளை நிறுத்துமாறு கூறியதோடு மக்களை எச்சரித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை முன்னிட்டு சிரமதானப் பணிகள் தாயகப் பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்ல மீள் நிர்மாணிப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை கஞ்சிகுடிச்சாறு, மட்டக்களப்பு, மாவடி முன்மாரி, தாண்டியடி, வாகரை கண்டலடி, திருமலை ஆலங்குளம், செம்மலை உள்ளிட்ட 7 மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிரமதானப் பணிகளை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று சிரமதான பணிகளை முன்னெடுத்தபோது இராணுத்தினர் வந்து சிரமதான பணிகளை இடை நிறுத்த கோரியதோடு, அதனை நிறுத்தாவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் அச்சுறுத்தி சென்றதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் இஅரண்டாவது தடவையாக அதே இராணுவத்தினர் சிரமதான பணியினை மேற்கொள்ளும் அனைவரையும் புகைபடம் எடுக்க வேண்டும், அத்தோடு தங்களது சுய விபரத்தையும் வழங்குமாறு கோரியதோடு அவற்றை பதிவு செய்த ஊடகவியலாளரின் அடையாள அட்டையை பரிசோதனை செய்த பின்னர் அட்டையை புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து அகன்று சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழர் தாயக பிரதேசங்களில் கார்த்திகை 27 புனித நாளாகவும் அன்று மாவீரர்களை வணங்க இந்த அரசும் இராணுவத்தினரும் தடுத்து வருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது எகக்கூறிய அவர்கள் சர்வதேசமும் , இலங்கை அரசும் அனுமதியழித்த பின்னரும் இராணுவமும் ,புலனாய்வு பிரிவும் தடுப்பதேன் என்றும் மாவீரர்களின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர்.