கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையம் தொடர்பில் மக்கள் விசனம்

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையம் தொடர்பில் மாவட்ட மக்களும் பயணிகளும் விசனம் வெளியிட்டுள்ளனர் .

மீள்குடியேற்றம் செய்யப்பட்டு 10 வருடங்கள் ஆகின்ற போதும் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் நிரந்தரமான பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்படவில்லை.

கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போதும் அதன் பணிகள் முழுமையாக முடிக்கப்படாது இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதி தற்போது சேறும் சகதியுமாக மழை நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு,சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது.

அத்துடன் இதனை சூழ தேனீர் கடைகள் உட்பட பல உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் கடைகளும் காணப்படுகின்றன.

இந்நிலையில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு நிரந்தர பேருந்து நிலையம் இல்லாமை இருக்கும் அவநிலை அங்கு காணப்படுகின்றது.

இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முழுமையாக அமைத்து முடிப்பதற்கு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே பொதுமக்களின் நலன்கருதி குறித்த பேருந்து நிலையத்தை விரைவாக அமைத்து முடிப்பதற்கு உரிய தரப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.