யாழில் உள்ள நன்னீர் குளத்தில் மருத்துவக்கழிவுகள்!

யாழ். பிறவுண் வீதியில் உள்ள நரிக்குண்டு நன்னீர் குளத்துக்குள் மருத்துவ கழிவுகள் வீசப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் குளத்தை அண்டியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள், தன்னார்வாளர்கள் , இளைஞர்கள் ஆகியோர் இணைந்து நேற்றையதினம் குளத்தினை சுற்றி வீசப்பட்ட கழிவு பொருட்கள் , சுற்றியுள்ள பற்றைகள் என்பவற்றை அப்புறப்படுத்தினார்கள்.

இதன் போது மருத்துவ கழிவுகள் அடங்கிய பாவித்த ஊசிகள் (சிரிஞ்) மருந்து போத்தல்கள் உள்ளடக்கப்பட்ட பைகள் அவ்விடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த நன்னீர் குளத்தை அண்டிய பகுதிகளில் மருத்துவ கழிவுகள் , பாவித்த கழிவு பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் என்பவற்றை வீசி வருவதனால் குளத்தின் நீர் மாசடைகின்றதனால் நிலத்தடி நீர் மாசடைந்து அருகில் உள்ள குடியிருப்பாளர்களின் வீட்டு கிணற்று நீரும் மாசடையும் ஆபத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டபட்டுள்ளது.

அங்கு குப்பைகள் மற்றும் , கழிவு பொருட்களை வீச வேண்டாம் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்த நிலையிலும் அதனையும் மீறி கழிவு பொருட்கள் வீசப்படுவதால் தற்போது அப்பகுதியில் CCTV பொருத்தப்பட்டு உள்ளது.

அதனூடாக கழிவுகளை வீசுபவர்களை அடையாளம் கண்டுள்ள போதிலும் அதிகாரிகள் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் அசமந்தமாக செயற்படுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில் தற்போது மழை காலமும் தொடங்கியுள்ளதால் அப்பகுதியில் வீசப்படும் கழிவு பொருட்களில் இருந்து துர்நாற்றம் வீசுகின்ற நிலையில், தாம் கடுமையான சுகாதார பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனமெடுத்து சுகாதாரத்தினை பேண் உதவுமாறும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.