மட்டக்களப்பில் தொடரும் அடைமழை! பெரும் பாதிப்பில் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழையினால் ஆறு பிரதேசெயலகங்களில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மண்முனை வடக்கு ,காத்தான்குடி, ஆரையம்பதி , அதுபோன்ற பிரிவுகளிலும் கிரான், வாழைச்சேனை, வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களிலும் வசிக்கின்ற 1050 குடும்பங்களை சேர்ந்த 3765 பேர் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சமைத்த உணவுகள், குடிநீர் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் போன்ற வசதிகளை அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரைக்கமைவாக மாவட்ட தேசிய அனர்த்த நிவாரண நிலையத்தினுடாக வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த நிலையப்பணிப்பாளர் எ.எம்.எஸ்.சியாத் தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தத்தில் கிரான், ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமுற்றுள்ளதுடன் சில தாழ் நில பிரதேசங்களில் வீதிக்கு குறுக்காக வெள்ள நீர் ஒடுவதனால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.

இதனையடுத்து கிரான் பகுதிக்கு இயந்திரப்படகுகள் மக்களின் பாவனைக்கு ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அனர்த்தத்தினால் ஏற்படுகின்ற பாதிப்பினை குறைப்பதற்கு கடற்படையினரும் ஏனைய படையினரும் உதவுவதற்கு தயாரான நிலையில் உள்ளதாகவும் அரசாங்க அதிபர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியாக 16.1 மில்லி மிற்றர் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இன்று 2ம் திகதி முதல் அடுத்த 24மணித்தியாளத்தில் 100மில்லி மிற்றர் முதல் 150மில்லி மிற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என காலநிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி க.சூரியகுமார் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தெரிவித்திருந்தார்.