யாழ்பல்கலைக் கழகத்தின் பன்னிரெண்டாவது பீடமாக துணை மருத்துவ விஞ்ஞான பீடம்

யாழ்பல்கலைக்கழகத்தின் துணை மருத்துவ விஞ்ஞான பீடத்துக்கு பதில் பீடாதிபதியாக கலாநிதி தெய்வி தபோதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் உடனடியாகச் செயற்பாட்டுக்கு வரும் வகையில் யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமியினால் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் மருத்துவ பீடத்தின் கீழ் அலகாக இயங்கிவந்த துணை மருத்துவ விஞ்ஞான அலகு நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் சிறப்பு வர்த்தமானி மூலமாக கடந்த மாதம் முதல் துணை மருத்துவ விஞ்ஞான பீடமாகத் தரமுயர்த்தப்பட்டிருந்தது.

இதன் மூலம் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பன்னிரெண்டாவது பீடமாக துணை மருத்துவ விஞ்ஞான பீடம் உருவாகின்றது.

இதேவேளை துணை மருத்துவ அலகின் இணைப்பாளராக பதவி வகித்த முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பெயர் பதில் பீடாதிபதிக்காக பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், தன்னால் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் மறுத்துள்ளார்.

இதன்காரணமாக மூப்பின் அடிப்படையில் கலாநிதி தெ. தபோதரன் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

, பட்டமளிப்பு விழா நெருங்கிவரும் நிலையில் – பட்டமளிப்பு விழாவில் பீடாதிபதிகள் முன்னிலையாக வேண்டி காரணத்துக்காக பேரவைக்கு அங்கீகாரமின்றி மிக அவசரமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக துணை மருத்துவ விஞ்ஞான பீட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.