கனரக வாகனங்களில் யாழிற்கு கொண்டு செல்லப்பட்டவை! மர்மம் விலகியது

யாழிற்கு நேற்று மாலை கனரக வாகனங்களில் பாரிய இயந்திரங்களின் பாகங்களை ஒத்த பொருட்களை எடுத்து செல்லப்பட்டிருந்தமை தொடர்பில் பரவலாக பேசப்பட்டிருந்த நிலையில் அதன் மர்மங்கள் விலகியுள்ளது .

குறித்த இயந்திரங்களின் பாகங்கள் யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் அமைக்கப்படும் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்திற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மறவன்புலவு பகுதியில் எல்.எம்.எல் என்ற தனியார் நிறுவனம் காற்றாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனினும் மக்களின் எதிர்ப்பினை கண்டுகொள்ளாமல் அங்கு காற்றாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறித்த பகுதிக்கு நேரில் விஜயம் செய்து நிலைமையை பார்வையிட்டிருந்தார்.

அத்துடன் அவருடன் பளை பிரதேசசபை தவிசாளர் சு.சுரேனும் அங்கு சென்றிருந்த நிலையில், இத்திட்டம் குறித்தும், அதன் சாதக பாதகங்கள் குறித்தும் நிறுவன பொறியியலாளர்களிடம் விளக்கம் கேட்டபோது அதற்கு நிறுவனத்தினர் விளக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ள 24 பீப்பாய்களையும் நிறுவி, அதன் மேலேயே காற்றாடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த ஒவ்வொரு பீப்பாயும் 80 அடி நீளமானது. ஒன்றின் மேல் ஒன்றாக 3 பீப்பாய்கள் அமைக்கப்பட்டு, அதன் மேலேயே காற்றாடி அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் 3 பீப்பாய்களை நிறுவும்போது, 240 அடி உயரமாகி விடும். அதன் மேல் 10 அடியில் கம்பமொன்று பொருத்தி- 250 அடி உயரத்திலேயே காற்றாடிகள் பொருத்தப்படும் என்றும், காற்றாடி விசிறிகள் ஒவ்வொன்றும் 200 மீற்றர் அடி நீளமானவையாக இருக்கும் என்பதுடன் அவை தரையிலிருந்து 400 அடிக்கு சற்று மேல் வரை விசிறிகள் சுழலும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

8 காற்றாடிகளின் மூலமாக 20 மெகா வோட்ஸ் மின்சாரத்தை அந்த நிறுவனம் உற்பத்தி செய்து, தேசிய மின் கட்டமைப்பிற்கு விற்பனை செய்யவுள்ளது.

ஏற்கனவே பளையில் 16 காற்றாடிகள் அமைக்கப்பட்டு இன்னொரு தனியார் நிறுவனம் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறதுடன் அதிலிருந்து 19 மெகா வோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதேவேளை குறித்த காற்றாலை மின் உற்பத்தியால் பாதிப்புக்கள் உள்ளதா இல்லையா என்ற சர்ச்சைகள் எழுதுள்ள நிலையில் , மறவன்புலவு பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியில் குறித்த திட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.