கொழும்பில் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி, பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி ரவீந்திர விஜயகுணவர்தன உள்ளிட்ட இருவரையும் விடுதலை செய்ய முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது பிணையில் உள்ள சந்தேக நபர்களான லக்சிறி அமரசிங்க எனும் தென்னந்தோப்பு உரிமையாளரும் அத்மிரால் ரவீந்ர விஜேகுனரத்னவும் ஆஜராகியிருந்தனர்.
லக்சிறி அமரசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிசும், ரவீந்ர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் பிரசன்னமாகி இருந்தனர்.
விசாரணையாளர்கள் சார்பில் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தர ஆஜரானார்.
இதன்போதே ,குறித்த கடத்தல் விவகாரத்தின் பிரதிவாதியான கடற்படையின் முன்னாள் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு நாட்டைவிட்டு தப்பிச்செல்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் ரவீந்திர விஜயகுணவர்தன மற்றும் லக்சிறி அமரசிங்க ஆகியோரை விசாரணைகளிலிருந்து விடுவிக்க முடியாது என நீதவான் தீர்ப்பளித்தார்.
அத்துடன் குறித்த இரு சந்தேக நபர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கிடமின்றி நீரூபிப்பதற்கு போதுமான சாட்சியங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் காணப்படுவதாக நீதிமன்றம் கருதுவதாகவும் நீதிவான் ரங்க திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, குற்றவியல் சட்டக் கோவையின் 120/3 சரத்திற்கு அமைய, சந்தேகநபர்களை விடுவிக்குமாறு கடந்த ஜனவரி 8 ஆம் திகதி சந்தேக நபர் இருவர் சார்பிலும் முன்வைக்கப்ப்ட்ட கோரிக்கையை நிராகரிப்பதாகவும் நீதிவான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.