யாழில் சுவிஸ் மதபோதகரால் ஏற்பட்ட நிலை! 137 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம் செம்மணியில் கடந்த 15ம் திகதி பிலதெனிய தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்து கொண்டதாக கூறப்படும் 137 பேரை இராணுவம் மற்றும் பொலிஸ் கண்காணிப்பில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும் போதும் அவர்கள் 137 பேரும் தமது தனிமைப்படுத்தல் வேளையில் வெளியேறாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் தலைமை தாங்கிய சுவிஸ்சர்லாந்து போதகர் தனது நாட்டுக்குத் திரும்பிய நிலையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கிலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக அந்த ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவர்களில் 137 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து யாழ்பாணத்தில் உள்ள மக்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் சிறப்புக் கூட்டம் இன்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டம் இன்று முற்பகல் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன், வடமாகாண சமுதாய மருத்துவ நிபுணர் ஆர்.கேசவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தன், யாழ்ப்பாணம் மாவட்ட உதவி அரச அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் தேவனேசன், யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் இ.ஜெயசீலன், கரவெட்டி பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி செந்துரன், ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பரா.நந்தகுமார், வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் போ.வாகிசன், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

loading...