தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாறும் இலங்கையின் நட்சத்திர ஹோட்டல்கள்!

நாட்டின் முன்னணி ஹோட்டல் நிறுவனங்கள் தமது அதிநவீன ஹோட்டல்களைத் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ,தற்காலிகமாகத் தொற்றுத்தடுப்புத் தனிமைப்படுத்தல் நிலையங்களாகப் பயன்படுத்துவதற்காக அரசாங்கத்துக்கு கையளிப்பதற்கு முன்வந்திருக்கின்றன.

வஸ்கடுவ சிற்ரஸ் ஹோட்டல்

வஸ்கடுவவில் உள்ள கரையோர சுற்றுலாப்பயணிகள் ஹோட்டலான சிற்ரஸின் இயக்குநர் சபை, நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக 150 அறைகளைக் கொண்ட அந்த ஹோட்டலை தற்காலிகமாக தனிமைப்படுத்தல் நிலையங்களாகப் பயன்படுத்துவதற்கு வழங்கத் தீர்மானித்துள்ளனர்.

உலகலாவிய ரீதியிலும் தற்போது நாடளாவிய ரீதியிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டே இத்தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு சிற்ரஸ் ஹோட்டல் நிர்வாகம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஹோட்டல் டொல்பின்

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நீர்கொழும்பிலுள்ள அதன் 154 அறைகள் கொண்ட ஹோட்டல் கிளப் டொல்பினை தொற்றுத்தடுப்புத் தனிமைப்படுத்தல் நிலையமாகப் பயன்படுத்துவதற்கு அனுமதியளித்திருக்கிறது.

ஜோன் கீல்ஸ் குழும சுற்றுலா விடுதி

இதேவேளை, ஜோன் கீல்ஸ் நிறுவனமானது திருகோணமலையில் உள்ள 81 அறைகள் கொண்ட ட்ரின்கோ ப்ளூ பே சினமன் ஹோட்டலை தற்காலிகமாகத் தொற்றுத்தடுப்புத் தனிமைப்படுத்தல் நிலையமாகப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறது.

மேலும் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து பூரண ஒத்துழைப்பை வழங்கிச் செயற்படத் தயாராக இருப்பதாக இலங்கை சுற்றுலா விடுதிகள் சங்கம் உறுதியளித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

loading...