ஏப்ரல் வரை அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது

கொரோனா காரணமாக இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் நாட்டில் ஏப்ரல் மாதம் வரையில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்த தட்டுப்பாடும் வரப்போவதில்லை என அரசாங்கம் கூறியுள்ளது.

இதனைக் வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளர் பந்துல குணவர்தன கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

அத்தியாவசிய பொருட்கள் பெரும்பாலும் இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற போதிலும் இப்போது சர்வதேச நாடுகளில் நெருக்கடி நிலைமையிலும் இலங்கையில் பொருட்களின் தட்டுப்பாடு நிலவவில்லை என குறிப்பிட்டார்.

வழைமையாக ஏப்ரல் மாதத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் அதிகமாகவே சேமித்து வைக்கப்படும்.

இந்த காலகட்டத்தில் பொதுவாகவே மக்களின் நுகர்வு அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொகையாக சேமிக்கப்படுவது வழக்கமானது.

இந்த நிலையில் இப்போது கொரோனா வைரஸ் பரவல் நிலைமை ஏற்பட்டுள்ள போதிலும் ஏப்ரல் மாதம் வரையில் அத்தியாவசிய பொருட்கள் குறித்து எந்த தட்டுப்பாடும் ஏற்படப்போவதில்லை என அவர் கூறினார்.

எனினும் இன்று முழு உலக நாடுகளும் நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் இறக்குமதிகளை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்

அத்துடன் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல, கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பருப்பு போன்ற தானியங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றது.

அதேபோல் டின்மீன், கடலை போன்றவை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியாதவை. ஆகவே இதற்கான மாற்று நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதுடன் கிழங்கு, கௌப்பி, மரவள்ளிக்கிழங்கு, வற்றாளைக்கிழங்கு போன்றவற்றை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் இன்னமும் மருத்துவ சேவை அரச துறையாக இருப்பதால் எம்மால் இன்றளவில் நாட்டில் கொரோனாவினால் ஒரு மரணத்தை கூட ஏற்படுத்த இடமளிக்கவில்லை எனக்குறிப்பிட்ட அவர், தனியார் துறை பற்றி பேசியவர்கள் இன்று எமது வேலைத்திட்டம் குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

loading...