சம்பளம், பினான்ஸ் நிவாரணங்கள் அமுலாகும் திகதியை அறிவித்தார் அமைச்சர் பந்துல

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த 24ஆம் திகதி அரச ஊழியர்களின் கடன்கள் உட்பட பல்வேறு நிவாரணங்களை ஜனாதிபதி கோட்டாபய அறிவித்திருந்தார்.

அதில் குறிப்பாக அரச ஊழியர்களின் கடன்கள் அவர்களது சம்பளத்தில் எதிர்வரும் மாதங்களில் கழிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இம் மாத சம்பளத்தில் கடன் கழிக்கப்பட்டிருப்பதாக அரச ஊழியர்களிடம் இருந்து புகார் எழுந்தது.

அத்துடன் ஜனாதிபதியின் பல நிவாரண அறிவிப்புக்களும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தனியார் வங்கிகளில், பினான்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களில் தெரிவிக்கப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, எதிர்வரும் மாதத்திலிருந்தே அரச ஊழியர்களின் சம்பளத்தில் கடன் கழிக்கப்படாது என தெரிவித்தார்.

மேலும் நிவாரண அறிவிப்புக்கள் இந்த வாரத்தில் அனைத்து வங்கி, நிதி நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது கூறினார்.