ஏப்ரல் 03ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம்!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் ஏப்ரல் 03ஆம் திகதி வரை நீடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் வீதம் தீவிரமாக அதிகரிக்கும் என்ற எச்சரிக்கையை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்திருந்தது.

இதனை கவனத்திற்கொண்டு நாட்டை இரண்டு வலயங்களாகப் பிரித்து தற்போது ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் அமுல்செய்திருக்கிறது.

இதன்படி கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களில் பேருவளை பிரதேசம் சிவப்பு அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல சுவிட்ஸர்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் – அரியாலை பிரதேசத்திற்குச் சென்று ஆராதனை நடத்திய கிறிஸ்தவ போதகர் விவகாரத்தை அடுத்து தாவடி பிரதேசம் முற்றாக முடக்கப்பட்டதுடன் யாழ். மாவட்டத்திற்கு மறுஅறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ந்தும் எதிர்வரும் 03ஆம் திகதிவரை (07 நாட்களுக்கு) ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதற்கு அரச உயர்மட்டம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.