மக்களே முகக்கவசம் அணிகையில் அதனைத் தவிர்த்த ஜனாதிபதி!

உலக நாடுகளுக்கு மட்டுமன்றி இலங்கைக்கும் பாரிய சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ்.

இந்நிலையில் கொரோனா நாட்டில் பரவாமல் இருப்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸினால் மேலும் பாதிப்புக்கள் இலங்கையில் ஏற்படாத வகையில் அதனைக் கட்டுப்படுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இன்றைய தினம் பதிலளிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

இதற்காக இன்றைய தினம் காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதேவேளை இலங்கை மட்டுமன்றி முழு உலக மக்களும் கொரோனா வைரஸ் தொற்றாமலிருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடாக முகக் கவசங்களை அணிந்து செல்லும் நிலையிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,மற்றும் அவரது மனைவியும் அதனை அணிந்திருக்கவில்லை.

இந்நிலையில் தலதா மாளிகையில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு பின்னர் பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீடங்களின் தலைமைத் தேரர்களை அவர் சந்தித்தார்.

மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றுக்கொண்ட ஜனாதிபதி , கொரோனா வைரஸினை ஒடுக்கும் தனது இரும்புக்கரம் கொண்ட வேலைத்திட்டத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்போது அவருக்கு மகாநாயக்க தேரர்கள் ஆசிவழங்கியதுடன் , ஆலோசனைகளையும் வழங்கியிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.