கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு அஸ்கிரிய - மல்வத்து பீடங்கள் 2 கோடி நிதியுதவி!

கொரோனா ஒழிப்பிற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்காக அஸ்கிரிய, மல்வத்து பீடம் மற்றும் தலதா மாளிகை என்பன இணைந்து 2 கோடி ரூபா நிதியுதவியளித்துள்ளன.

இன்று தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் மகாநாயக்க தேரர்களை சந்தித்த போதே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியிடம் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு தியவதன நிலமே நிலங்க தேலவினால் ஒரு கோடி ரூபா வழங்கி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்தித்த ஜனாதிபதி, கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி விளக்கினார்.

இந்த நிலையில் மகாநாயக்க தேரரும் அந்நிதியத்திற்கு 50 லட்சம் ரூபா நிதியினை அன்பளிப்பு செய்தார்.

அத்துடன் இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மல்வத்து அநுநாயக்க தேரர் நியங்கொட விஜிதசிறி தேரரையும் சந்தித்தார்.

கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு அஸ்கிரி விகாரையினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 50 லட்சம் ரூபா மற்றும் மல்வத்தை, அஸ்கிரி விகாரைகளிடமிருந்து கிடைத்த ஆசிர்வாதங்களுக்காக ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.