30 ஆம் திகதியின் பின்னர் மன்னாரில் அமுலுக்குவரும் பாஸ் நடைமுறை!

மன்னாரில் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தின் போது நடமாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு பாஸ் நடடைமுறையினை அமுல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வேண்டுகோளுக்கு அமைவாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மன்னார் மாவட்டச் செயலக்ததில் மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்றாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பல்வேறு தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் குறிப்பாக மன்னாரில் எதிர்வரும் 30ஆம் திகதியின் பின் ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்திலும் அவசரத் தேவைக்காக நடமாடுவதற்காக ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் பாஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த பாஸ் நடை முறையானது அரச உத்தியோகத்தர்கள், பொது மக்களுக்கள், வியாபாரிகள், போன்றவர்கள் ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்திலும் நடமாட வழங்கப்பட உள்ளது.

இதே நேரம் மீனவர்களுக்கு மீன்பிடி திணைக்களத்தின் உதவி பணிப்பாளரின் சிபாரிசிலும், விவசாயிகளுக்கு விவசாயத் தினைக்ககளத்தின் பிரதி பணிப்பாளரின் சிபாரிசிற்கு அமைவாகவும் குறித்த பாஸ் வழங்கப்பட உள்ளது .

இந்த பாஸ் அனுமதிகள் அனைத்தும் பிரதேச செயலாளர்களின் சிபாரிசுகளுடன் அந்தந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் வழங்கப்படும் என கலந்துரையாடலில் முடிவுகள் எட்டப்பட்டது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டத்தில் இருந்தும் பொருட்கள் கொண்டு செல்வதற்கான விதிமுறைகள் நடைமுறைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

வெளி மாவட்டத்தில் இருந்து கொண்டு வருகின்றவர்கள் அவர்களே கிராம பகுதிகளுக்கு சென்று வியாபாரத்தை மேற்கொள்ளாமல் மொத்த வியாபாரிகளிடம் கொடுத்து செல்வதும், அவ்வாறே இந்த மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்களும் அந்த நடை முறைக்கு செயல்பட தீர்மானிக்கப்பட்டு நடை முறைப்படுத்துவதற்கான திட்டங்களும் இதன்போது வகுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கலந்துரையாடலில் பொலிஸ் உயர் அதிகாரிகள், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.