ஊரடங்கு வேளையில் மரண வீட்டிற்கு செல்வதாகூறி அனுமதி பெற்றவர்கள் செய்த காரியம்!

கொழும்பிலிருந்து தம்புள்ளையில் மரண வீடொன்றுக்கு செல்வதாக கூறி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டு, தம்புள்ளையிலிருந்து மூன்று வாகனங்களில் சுமார் 2000 கிலோ நிறையுடைய மரக்கறிகளை ஏற்றிசென்ற மூவர், யக்கல பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யக்கல பொலிஸ் பிரிவில் இருக்கும் வீதி சோதனை சாவடியில் வாகனம் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது வாகனத்தில் பயணிப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொண்ட அந்த நபர், தானும் இன்னுமிருவரும் தம்புள்ளையில் மரணவீடொன்றுக்கு சென்று வருவதாகவும் வரும் வழியில் மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இன்னுமிரண்டு வேன்களும் வருவதாகவும் குறித்த நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும், மூன்று வாகனங்களில் மூன்றுபேர் மரண வீடொன்றுக்கு சென்று திரும்புவது தொடர்பில் சந்தேகம் கொண்டு விசாரணைக்கு உட்படுத்திய போதே, அவர்களின் திருட்டுதனம் அம்பலமானது.

இதன்போது மரண வீட்டுக்கு செல்வதாக பொய் கூறிவிட்டு, ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் பயணிப்பதற்கான அனுமதி சீட்டையும் பெற்றுக்கொண்டு, மரக்கறிகளை கொழும்புக்கு ஏற்றியமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மூவரையும் கைது செய்த பொலிஸார், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.