சமூகபொறுப்பற்ற சமுர்த்தி உத்தியோகத்தரால் மட்டக்களப்பில் முண்டியடித்த மக்கள்!

கொரோனா அபாய காலகட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாமல் மட்டக்களப்பில் சமுர்த்தி பயனாளிகளிற்கான ‘சஹனபியவர’-சலுகை கடன் உத்தியோகத்தரால் வழங்கப்பட்டுள்ளது .

இதனையடுத்து மக்கள் அங்கு குவிந்ததையடுத்து, தகவலறிந்து அங்கு சென்ற பொலிசார் மக்களை கலைந்து போகச் செய்தனர்.

இந்த சம்பவம் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேத்தாழை கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

பிரதேச சமூர்த்தி உத்தியோகத்தாரால் பயனாளிகளுக்கான முற்கொடுப்பனவு 5000 ரூபா பேத்தாழை பலநோக்கு மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இதன்போது பயனாளிகள் அங்கு பெருமளவில் குவிந்ததுடன். அவர்களில் பெரும்பாலானவர்கள் எந்த பாதுகாப்பு முன்னேற்பாடும் செய்திருக்கவில்லை.

அத்துடன் குழுமிய மக்கள் முண்டியடித்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.

இதேவேளை நட்டில் கோரோனா பரவலை தடுக்க ஊரடங்கு காலப்பகுதியில் மக்கள் கூட அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை.

அத்துடன் பொதுமக்களின் அத்தியாவசிய சேவைகளை வீடு தேடி வழங்கும் உத்தரவை அரசாங்கம் வழங்கியுள்ள போதும் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் அரச சுற்றுநிருபத்தை புறம்தள்ளி, மக்களை அழைத்திருந்தார்.

இதனையடுத்து அங்கு சென்ற கல்குடா பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை வீடுகளுக்கு செல்லுமாறு பணிப்புரை விடுத்தனர்.

அத்துடன் மக்கள் கூடியிருப்பது ஆபத்தானதென எச்சரித்த பொலிசார் மக்களை அங்கிருந்து கலைந்து போகுமாறு கூறியதுடன், இவ்வாறு கூடுவதால் கொரோனா பரவ வாய்ப்பிருப்பதாகவும் மக்களுக்கு அறிவுரை வழங்கினர்.

இதேவேளை கடன் வழங்கும் நடைமுறை தொடர்பாக மாவட்டத்தில் உள்ள சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள், சமூர்த்தி முகாமையாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர்கள், மக்களின் வீடுகளுக்கு சென்று பணத்தினை வழங்குமாறு மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் கடந்த 26 ஆம் திகதி அனுப்பப்பட்ட சுற்றுநிருபத்தின் ஊடாக தெளிவு படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.