17 பேருந்துகளில் வவுனியாவுக்கு வந்த கடற்படையினர்!

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களை தனிமைப்படுத்தலுக்காக வவுனியா பம்பைமடு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இன்று இரவு 7 மணியளவில் 17 பேரூந்துகளில் கடற்படையினர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதையடுத்து, அம் முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலர் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடற்படையினரை அழைத்து வந்த பேரூந்துகளை வவுனியா, குருமன்காடு பகுதியில் வைத்து ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்த போது அங்கு வந்த கடற்படை அதிகாரிகள் ஊடகவியலாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது 17 பேரூந்துகளும் வீதியில் நிறுத்தப்பட்டமையால் சிறிது நேரம் அவ் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முனைந்ததையடுத்து கடற்படையினர் அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.