பண்டராநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் புதிதாக அமைக்கப்படும் இரண்டாம் முனையம்!

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் புதிதாக இரண்டாம் முனையமொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் , அதன் கட்டுமானப்பணிகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கும் விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இந்த அபிவிருத்தி செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நிதியளிக்கும் பங்காளியாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதுடன் ஜப்பான் விமானநிலைய ஆலோசனை வழங்கல் நிறுவனம், நிப்பொன் கோய் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இத்திட்டத்திற்கான ஆலோசனைகளை வழங்குகின்றன.

இதேவேளை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டாவது முனையம் சுமார் 180,000 மீற்றர் பரப்பளவான நிலப்பகுதியை உள்ளடக்கியதாக அமையவிருக்கிறது.

அத்தோடு இந்த முனையம் ஆண்டுதோறும் சுமார் 9 மில்லியன் பயணிகளை உள்வாங்கும் திறனைக் கொண்டிருப்பதாகவும் விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் மூன்றுவருட காலத்திற்குள் முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த இரண்டாவது முனைய நிர்மாணத்திட்டம் நாட்டின் விமானசேவைத்துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்குவதாக அமையும் என சுற்றுலா மற்றும் விமானசேவைகள் அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.