மூக்கை அறுவை சிகிச்சை செய்து உருவத்தை மாற்றிய அங்ககொடா லொக்கா

சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி இலங்கை நிழல் உலக தாதா அங்ககொடா லொக்கா மூக்கை அறுவை சிகிச்சை செய்து இருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கை நிழல் உலக தாதா அங்ககொடா லொக்கா கொலை வழக்கில் தனிப்படைகள் மதுரை, ஈரோடு, கோவையில் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிபிசிஐடி-யிடம் இந்திய உளவு அமைப்பான “ரா” அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளது.

கோவையில் உயிரிழந்தது லொக்கா என்பதை உறுதி செய்வதற்காக டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட உள்ளது.

லொக்காவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் சென்னை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடலிலிருந்து எடுக்கப்பட்ட இதயமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்த வழக்கில் கைதான சிவகாமசுந்தரியின் 7 வங்கி கணக்கிற்கு ரூ.1 கோடி வரை பணம் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, சிபிசிஐடி நடத்திய விசாரணையில் கோவை தனியார் மருத்துவமனையில் அவர் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பாலாஜி நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அங்ககொடா லொக்கா மூக்கை அறுவை சிகிச்சை செய்து மாற்றி தனது தோற்றத்தை மாற்றியுள்ளதும் சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது