வெடுக்குநாறி ஆதிசிவனுக்கு திருவிழாவிற்கு தடை!

நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லவோ, அங்கு பூசைகள் செய்யவோ முடியாது என ஆலய நிர்வாகத்திற்கு நெடுங்கேணி பொலிசார் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இந் நிலையில், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை தோற்றியுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமையவே, நெடுங்கேணி பொலிசார் இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் ஆலய நிர்வாகத்தினர் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, தொல்பொருள் திணைக்களத்தின் கடிதம் காண்பிக்கப்பட்டதாகவும் குறித்த கடிதம் தனிச் சிங்களத்தில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

தொல்பொருள் இடங்கள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சிரமதானம் செய்யவோ, திருவிழா நடத்தவோ முடியாது என கடிதத்தில் உள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை வெடுக்குநாறி ஆலய விவகாரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், வெடுக்குநாறி ஆலயத்தில் வழிபட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதனை ஆலய நிர்வாகத்தினர் சுட்டிக்காட்டியபோது, பொலிசார் அதை ஏற்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.