மன்னாரில் 305 கிலோ மஞ்சள் கட்டிகளுடன் சந்தேகநபர் கைது!

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் உள்ள கடல் பகுதியில் ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளை வலைகளுக்குள் மறைத்து வைத்த நிலையில் படகு ஒன்றில் கடத்த முற்பட்ட சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை மன்னார் ஊழல் தடுப்பு பொலிஸ் பிரிவினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

புலனாய்வு தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வலைப்பின் போது, இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 305 கிலோ 400 கிராம் எடை கொண்ட மஞ்சள் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது மன்னார் எழுத்தூர் பகுதியை சேர்ந்த 50 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதோடு, கைது செய்யப்பட்ட நபரை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.