விபத்தில் 3 வயது சிறுமி பரிதாப பலி! பெற்றோர் படுகாயம்

ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியின் மஹஉஸ்வௌ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் குறித்த சிறுமியின் தாயும், தந்தையும் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நவகத்தேகம பிரதேசத்திலிருந்து ஆனமடுவ பகுதியை நோக்கி கணவனும், மனைவியும் தமது 3 வயது பெண் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.

இதன்போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டுவிலகி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 3 வயது சிறுமி உட்பட அச்சிறுமியின் தாயும், தந்தையும் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கும், பெற்றோர்கள் புத்தளம் தள வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டனர்.

எனினும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த தாயும், தந்தையும் புத்தளம் தள வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் விபத்து தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.