நுவரெலியாவில் பாரிய தீப்பரவல்!

நுவரெலியா, இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை பிரதான நகரில் இராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியின் மருங்கில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் சில்லறை கடை, கோழி கடை மற்றும் தொடர்பாடல் நிலையம் ஆகிய மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

இந்நிலையில் பிரதேச பொது மக்கள், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், இராகலை பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ள நிலையில், தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும் இந்த தீ விபத்து தொடர்பில் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.