யாழில் வயல் வேலைக்குச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் வயல் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த செல்லத்துரை கனகரத்தினம்(வயது 65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நவாலி பகுதியில் வயல் செய்துவரும் குறித்த நபர் நேற்று வயல் வேலைக்கு சென்றுள்ளார்.

இரவுவெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரை குடும்பத்தினர் தேடி உள்ளனர். இந்நிலையில் வயல் வழியாகச் சென்ற நபர் ஒருவர் விழுந்து கிடப்பதை அவதானித்து உடனடியாக அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அத்துடன் மானிப்பாய் போலீசாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீட்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.