கண்டியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்!

கண்டியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள் தொடர்பிலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கண்டி, பூவெலிக்கடை, சங்கமித்த மாவத்தயிலுள்ள ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஞாயிறு அதிகாலை 5 மணியளவில் 5 மாடிக் கட்டமொன்று பூமிக்குள் தாழிறியங்கியதால் அதன் இடிபாடுகள் காரணமாக அதற்கு அருகில் இருந்த ஹோட்டலொன்றின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் ஒன்றரை மாத குழந்தை ஆகியோர் உயிரிந்தனர்.

மேலும் அந்த ஐந்து மாடிக் கட்டடத்தின் நுழைவாயிலைத் தவிர முழு கட்டடமும் இடிந்து வீழ்ந்துள்ளது.

ஐந்து மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்த போது, இடிபாடுகள் காரணமாக அதற்கு அருகிலே இருந்த மற்றும் இரு கட்டடங்களும் இடிந்து வீழ்ந்துள்ளன. கண்டி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி சுதத் மாரசிங்க தெரிவித்தார்.

உயிரிழந்தவர், சரிந்து வீழ்ந்த 5 மாடி கட்டடத்திற்கு அருகில் ஹோட்டலொன்றை நடாத்தி வந்துள்ளதோடு, அந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரு அறையிலும் மனைவியின் தாய் மற்றும் மற்றுமொரு பெண்ணொருவரும் மற்றொரு அறையிலும் தங்கியிருந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் ஒன்றரை வயது குழந்தை மீட்கப்பட்டு, கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

மற்றைய அறையில் தங்கியிருந்த உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் அங்கு பணி புரிந்த பெண் ஒருவர் ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கிய சடலங்களைத் தேடும் பணியில் சுமார் 50 இராணுவம் விமானப்படையினர் கண்டி மாநகர தீயணைக்கும் பிரிவுவைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு ஈடுபட்டிருந்தது.

இச்சம்பவத்தில் சமில பிரசாத் (வயது-35), அச்சலா ஏகநாயக்க (வயது-32) மற்றும் அவர்களது ஒன்றரை மாத குழந்தை ஆகியோர்களே இடர்பாடுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர் அச்சலா ஏகநாயக்க, சட்டத்தரணியும் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளருமாவார். சம்பவத்திற்குப் பிறகு மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே சம்பவ இடத்திற்குச் வந்ததோடு, கட்டடம் அங்கீகாரத்துடன் கட்டப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான புவியியலாளர் சமந்த போகாஹபிட்டி தெரிவிக்கையில், “இடிந்து வீழ்ந்த கட்டடம் ஒரு பள்ளமான பகுதியில் அமைந்துள்ளது. இது இயற்கையான நிலச்சரிவினாலா அல்லது கட்டுமானத் தரத்தில் குறைபாட்டினாலா இடிந்து வீழ்ந்ததா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – என்றார்.

இது தொடர்பில் உயிரிழந்த அச்சலா ஏகநாயக்கவின் தாயார் ஜெயந்தி ஏகநாயக்க (60) தெரிவித்ததாவது;

நான் ஹோட்டலில் பணிபுரிந்த பெண் ஒருவருடன், ஹோட்டல் அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். மருமகனும் மகளும் குழந்தையும் மற்ற அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதிகாலை 5 மணியளவில் ஒரு பெரிய அதிரும் சத்தம் கேட்டது. எதுவும் தென்படவில்லை. எமது அறையின் சுவர் இடிந்து எமது கட்டிலின் அருகிலேயே வீழ்ந்ததுநாலா பக்கவும் எதுவும் தெரியவில்லை.

தொலைபேசி கையில் சிக்கியது. அதில் 119 ஐ அழைத்து வீடு இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவித்தேன். சிறிது நேரத்திலேயே பொலிஸார் அங்கு வந்தனர். ஒரு குழு கயிறுடன் இறங்கி எங்கள் இடத்திற்கு வந்து எங்களை அழைத்துச் சென்றனர். எனது மகளும் அவரது கணவரும் இருந்த அறை முற்றாக தரைமட்டமாக இருந்தது என கூறினார்.