முற்றாக முடங்கியது வடக்கு, கிழக்கு ! வெறிச்சோடிய வீதிகள்

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள், மற்றும் தியாகத் தீபம் திலீபனை நினைவுகூர விதிக்கப்பட்ட தடை உள்ளிட்டவற்றை முன்வைத்து வடக்கு கிழக்கில் இன்று பூரண கதவடைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கவில்லை.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் வர்த்தக நிலையங்களை திறக்கும்படி இராணுவத்தினர் மிரட்டல் பாணி அறிவித்தல் விடுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்

குறிப்பாக சாவகச்சேரி பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்கும்படி இராணுவத்தினர் வற்புறுத்தி வருகிறார்கள். இன்று தாம் கண்காட்சியொன்றை நடத்தவுள்ளதாகவும், அதனால் வர்த்தக நிலையங்களை திறக்கும்படி வற்புறுத்தியபோதும் வர்த்தகர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.

அதேபோல வவுனியாவில் தமிழ் , இஸ்லாமிய வர்த்தகர்கள் கடையடைப்புக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

எனினும் வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் செயலாளரின் வர்த்தக நிலையம் உட்பட சில தமிழர்களின் கடைகள் திறக்கப்பட்டிருந்தது.

இதே வவுனியா மொத்த மரக்கறி விற்பனை நிலையம் வழமைபோல் காலையில் செயற்பட்டதுடன் பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் தூர இட சேவைகளும் குறைந்த அளவில் இடம்பெற்றிருந்தது.

இந் நிலையில் அரச திணைக்களங்கள் மற்றும் உணவகங்கள் வழமைபோல் செயற்பட்டது.

மேலும் ஹர்த்தாலிற்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

இன்றைய தினம் ஹர்த்தாலினால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியது யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வீதிகளில் பயணிக்கவில்லை, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.