மட்டக்களப்பு பெண்மணிக்கு ஒரு சூலில் 3 குழந்தைகள்!

மட்டக்களப்பு திராய்மடு பகுதியைச்சேர்ந்த பெண்மணியொருவர் ஒரே சூலில் 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

குறித்த பெண்மணி நேற்று பிற்பகல் அம்பாறை மாவட்டம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

31 வயதுடைய மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரவச வலி ஏற்பட்டதையடுத்து கடந்த 13 ஆம் திகதி அன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலை அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் இடப்பற்றாக்குறை காரணமாக பதினைந்தாம் திகதி கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு அறுவை சத்திரசிகிச்சை மூலம் 3 பெண் குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார்.

இந்நிலையில் குழந்தைகள் மூவரும் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச் சத்திர சிகிச்சையை வைத்தியர் எம்.கே தௌபிக், மகப்பேற்று வைத்திய நிபுணர் ராஜிவ் விதானகே தலைமையிலான வைத்திய குழுவினர் மேற்கொண்டனர்.

இதேவேளை பெண்ணின் கணவர் கடற்தொழிலாளி என்பதுடன் ஏற்கனவே இத்தம்பதியினருக்கு பெண் ஆண் என இரு குழந்தைகள் உள்ளன.

மேலும் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இவ்வாண்டில் கிடைக்கப்பெற்ற ஒரே சூலில் பெறப்பட்ட 3 குழந்தைகள் பிரசவித்துள்ள 4 வது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.