செட்டிக்குளம் – கிறிஸ்தவகுளத்தில் இளைஞர்கள்மீது துப்பாக்கி முனையில் தாக்குதல்!

வவுனியா, செட்டிக்குளம், கிறிஸ்தவகுளம் பகுதியில் காணி துப்பரவாக்கும் பணிக்காக சென்றிருந்த இளைஞர்கள் மீது துப்பாக்கி முனையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக காயமடைந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு செட்டிகுளம், கிறிஸ்தவ குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

செட்டிகுளம், கிறிஸ்தவ குளம் பகுதியில் காணி துப்பரவாக்கும் பணிக்காக சென்று ஓய்வெடுத்து கொண்டிருந்த 05 இளைஞர்கள் மீது அங்கு சென்ற குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது அவர்களை துப்பாக்கிகளை காட்டி கத்தி, வாள், கோடாரி மற்றும் இருப்பு கம்பிகள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர்.

அத்துடன் , தம்மிடம் இருந்த பணம், நகை, தொலைபேசியை போன்ற உடமைகளையும் அந்த குழு பறித்து சென்றுள்ளதாகவும் காயமடைந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 5 இளைஞர்களும் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இன்று காலை மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் தொடர்பில் வவுனியா வைத்தியசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.