மூடப்பட்டது மருதங்கேணி கொரோனா வைத்தியசாலை; தொற்றாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கொரோனா வைத்தியசாலை மூடப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்த 30 தொற்றாளர்கள் கிளிநொச்சியிலுள்ள வடமாகாண தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் முன்னர் விடுதலைப் புலிகளின் நவம் அறிவுக்கூடம் இயங்கி இடத்தில், இராணுவத்தின் வைத்தியசாலை இயங்கி வந்த நிலையில் தற்போது, வடமாகாண தொற்று நோயியல் சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து, இந்த வைத்தியசாலை உருவாக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு , நாட்டின் முதன்மையான தொற்றுநோயியல் வைத்தியசாலையாக உருவாக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட குறித்த வைத்தியசாலையில் இன்று (29) முதலாவது தொகுதி கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி அங்கு 40 தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மழைக்காலத்தில் மருதங்கேணி வைத்தியசாலையில் தண்ணீர் தேங்குவதுடன், அங்கிருந்து பிறபகுதிகளிற்கு தண்ணீர் செல்வதால் தொற்று அபாயம் ஏற்படலாமென்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த வைத்தியசாலை மூடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.