முடக்கப்படுமா யாழ் குடாநாடு? வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியது

யாழ்ப்பாணம் குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இல்லை எனவும், எனவே மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், யாழ்ப்பாணம் குடாநாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும், அவ்வாறு எந்தவிதமான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.

மேலும், காரைநகர் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், குறித்த நபருடன் நேரடித் தொடர்புகளைப் பேணிய 21 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் , குறித்த 63 பேருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதோடு பி.சி.ஆர் முடிவுகளில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் மாத்திரம், சில வேளைகளில் காரை நகர் பிரதேசம் முடக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கூறிய அவர், இது தொடர்பில் தற்போது வரை எந்தவிதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார்.