யாழ் மாணவர்களின் உண்ணாவிரத நாளில் இரவு நடந்த பலரும் அறியாத நெகிழ்ச்சிச் சம்பவம்

யாழ் பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பினைத்தொடர்ந்து உண்ணாவிரதமிருந்த மாணவர்கள் உடல்நிலை மோசமானபோது அன்றைய இரவு நடந்த பலரும் அறியாத நெகிழ்ச்சிச் சம்பவம் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.

மறுநாள் திணைவேந்தரே நேரில் வந்து அடிக்கல் நாடிவைக்குமளவுக்கு அன்றைய பின்னிரவு வேளையில் நடந்ததுதான் இந்த சம்பவம் என தற்பொழுது தெரியவந்துள்ளது.

உண்ணாவிரதமிருந்த பல்கலைக்கழக மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்ததை சட்டத்தரணி க.சுகாஸ் களத்திலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர், வைத்தியக் கலாநிதி யமுனானந்தாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அதிகாலை 2.00 மணியளவில், உடனடியாகவே உண்ணாவிரத மேடைக்கு விரைந்து வந்த யமுனானந்தா , மாணவர்களைப் பரிசோதித்து அவர்களின் உண்ணாவிரதம் இனிமேலும் தொடர்வது பிரச்சினையை உண்டுபண்ணக்கூடும் என வலியுறுத்தினார்.

அத்துடன் இது தொடர்பில் பலதரப்பட்டோருக்கும் தகவல் சென்று சேரவே மறுநாள் மாணவர்களின் உண்ணாவிரதம் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதேவேளை பல்கலைகழக நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட செயலை “இது ஓர் கலாசார இனப்படுகொலை” என யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர், வைத்தியக் கலாநிதி யமுனானதா தனது கண்டனத்தை பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.