புத்துயிர்பெறும் பல்கலைக்கழக நினைவுத்தூபி

இடித்தழிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இன்று மீண்டும் அதே இடத்தில் கட்டுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பல்கலை நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டது.

அதனையடுத்து மாணவர்களும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்ட நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் குவிக்கப்பட்டு யாருமே உள்நுழைய முடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாணவர்கள் தொடர்போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில், மறுநாள் மாணவர்களுக்கும் துணைவேந்தருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில் மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே தூபியை இடித்ததாகவும் தான் எதுவும் செய்ய முடியாது எனவும் பதிலளித்துள்ளார்.

அத்துடன் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த சுகாதாரப்பிரிவினர் தற்போது நிலவும் கொரோனா தொற்று காரணமாக ஒன்று கூடலைத் தவிர்க்குமாறும் மீறி கூடினால் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய தனிமைப்படுத்தப்படுவார்கள் எச்சரித்திருந்தனர்.

இருப்பினும் மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக பல்வேறு அமைப்புக்கள், மற்றும் சர்வதேச நாடுகளில் எழுந்த பெரும் கண்டனத்தையடுத்து துணைவேந்தர் இடிக்கப்பட்ட தூபியை மீண்டும் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்நிலையிலேயே இன்றைய தினம் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தூபியின் கட்டுமானப் பணி வெகு விரைவாக நடைபெற்று முடிவடையும் என யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.