முடக்கப்பட்ட உக்ரைனில் இருந்து 1,184 பயணிகள் இலங்கைக்கு வருகை

கொரோனா அச்சம் காரணமாக உக்ரைன் நாடு முடக்கப்பட்டுள்ள நிலையிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியில் இருந்து தற்போது வரை 1,184 உக்ரைனிய சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன் மேலும் மூவாயிரத்திற்கும் அதிகமான உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியில் இருந்து தற்போது வரையில் உக்ரைன் நாட்டில் இருந்து 1184 பயணிகள் இவ்வாறு இலங்கைக்கு வந்துள்ளனர்.

இவர்களின் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் முறையான தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

"எயார் -பபிள்" முறைமையின் கீழ் இவர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்படுவதனால் அவர்கள் அனைவருமே ஒரே குழுவாக நாட்டில் சுற்றுலா பிரதேசங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேபோல் மேலும் மூவாயிரத்திற்கு அதிகமான உக்ரைன் நாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வர தயாராக உள்ள நிலையில் கட்டம் கட்டமாக அவர்கள் இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இம்மாதம் 21 ஆம் திகதியில் இருந்து கட்டுநாயக விமானநிலையம் முழுமையாக திறக்கப்படுவதை அடுத்து பிரித்தானியா தவிர்ந்து ஏனைய நாட்டின் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும்.

அதேபோல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களும் கட்டம் கட்டமாக இலங்கைக்கு வரவழைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதேவேளை இவ்வாறு இலங்கைக்கு வருகை தரும் சகலரும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய செயற்பட்டாக வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.