முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் அரங்கேறிய கொடூரம்; வெளியான பரபரப்பு தகவல்!

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் நிலையத்தில் தான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக பிரதேசவாசியெருவர் பரபரப்பு வாக்குமூலமளித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபரின் உடலில் பல காயங்கள் காணப்படுகின்ற நிலையில் அவர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி கோட்டைக்கட்டியகுளம் பகுதியில் கட்டுத்துவக்கு வெடிப்பு சம்பவத்தில் சிங்கராஜா சுஜீவன் எனும் குடும்பஸ்தர் படுகாயமுற, அவருடன் வயலுக்கு சென்ற ராமச்சந்திரன் (60) எனும் நபர் படுகாயமுற்ற குடும்பஸ்தரின் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கிவிட்டு படுகாயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளார்.

அன்று இரவு 8 மணியளவில் அவரது வீட்டில் வைத்து மல்லாவி பொலிசாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்தநபரை நீதிமன்றில் முற்படுத்திய பின்னர் நீதவான் இவருக்கு பிணை வழங்கிய நிலையில் தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் பொலிசாரால் சித்திரவதை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேவேளை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ராமச்சந்திரன் கூறுகையில்,

காவல் நிலைய சிறைக்கூடத்தில் நான் தூங்கிக்கொண்டு இருந்த வேளை இரவு 10 மணியளவில் என் சிறைக்கூடாரத்திற்கு வந்த பொலிஸ் காவலர் என்னை வெளியில் வருமாறு அழைத்தார். பின்னர் ஒரு அறை ஒன்றுக்குள் என்னை அழைத்து சென்றனர். அதற்குள் ஏற்கனவே 7,8 பொலிஸ் காவலர்கள் இருந்தனர். அவர்களுடன் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியும் அமர்ந்திருந்தார்.

என்னை உட்காருமாறு கூறிவிட்டு நீதானே கட்டுதத்துவக்கு வைத்தனி என்று எனது இடுப்பு பகுதியில் ஒரு கொட்டனால் அடித்தார் ஒருவர். மிக்சி (அரைக்கும் இயந்திரம்) ஒன்றுக்குள் கொச்சி மிளகாய் அரைத்துக் கொண்டிருந்தது. என்னை மீண்டும் தூக்கி நிறுத்தி விட்டு என் கண்ணுக்குள் அரைத்த மிளகாய் தூளினை விட்டனர்.இரவு ஒருமணியளவில் மீண்டும் என் கண்ணுக்குள் தூள் விட்டனர்.

அதன் பின்னர் என்னை முழு நிர்வாணம் ஆக்கி உடலில் கொச்சி மிளகாய் தடவினார்கள். பின்னர் எனக்கு என்ன நடந்த என்று தெரியாது. மயங்கி விட்டேன். என் முதுகு மற்றும் பின் பகுதிகள் எங்கும் கண்டல் காயங்கள் இருந்தன. அதன் பி்ன்னர் என்னை நீதவான் முன்னிலையில் பாரப்படுத்தினர். அங்கு கூட என்னை கதைக்கவோ, எனக்கு அடித்தார்கள் என்ற விடயத்தையோ தெரிவிக்க பொலிசார் அனுமதிக்கவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார்.