யாழில் வழிப்பறியில் ஈடுபடும் மோசடி கும்பல்; திடீர் சுற்றிவளைப்பில் சிக்கினர்

யாழ்.நாவற்குழி பாலத்திற்கு அருகில் ஆட்டோவை நிறுத்திவிட்டு பெற்றோல் முடிந்துவிட்டதாக கூறி வீதியால் செல்வோரிடம் பணம் பறித்து வந்த கும்பல் அப்பகுதி இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இந்த நுாதன திருட்டு நாவற்குழி பாலத்திற்கும் யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவுக்கும் இடையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு இடம்பெற்றுவந்தது.

இந் நிலையில், இது தொடர்பாக அப்பகுதி இளைஞர்களுக்கு பொதுமக்கள் சிலர் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து நாவற்குழி இளைஞர்கள் குறித்த பகுதிக்குச் சென்று சம்பவத்தை அவதானித்து, கொள்ளையர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இராணுவத்தினர் வருகை தந்திருந்த நிலையில், சாவகச்சேரிப் பொலிஸாருக்கு இளைஞர்கள் தகவலை வழங்கியதையடுத்து பொலிஸார் அங்கு வருகைதந்தனர்,

இந்நிலையில் குறித்த கொள்ளைக் குழுவைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.