திடீர் சுற்றிவளைப்பில் 3 வாகனங்களுடன் 9 பேர் கைது!

மரக்கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக பொலிசார் மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போது 3 வாகனங்களுடன் 9பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளும் புளியங்குளம் பொலிசாரால் கப்பற்றப்பட்டுள்ளது.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்பட்ட விஷேட பொலிஸ் பிரிவில் 7 பேரடங்கிய பொலிஸ் குழுவினரால் புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிக்குளம், புதூர், பரசங்குளம், அனந்தர்புளியங்குளம் பகுதிகளில் 20இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை குற்றிகள் 35, தேக்கங்குற்றிகள் 15 என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

அதோடு மரக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பாரஊர்தி, பட்டா ரக கப் வாகனங்கள் என்பவற்றுடன் சந்தேக நபர்கள் 9 பேரையும் கடந்த மூன்று தினங்களில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் நீண்டகாலமாக இவ்வாறான சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களையும், கைப்பற்றிய பொருட்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.