கீத் நொயார் விவகாரம் - ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு !

த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சம்பவம் தொடர்பில் ஒன்பதாவது சந்தேக நபரான இராணுவ புலனாய்வுப் பிரிவின் கோப்ரல் லலித் ராஜபக்ஷ இன்று கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

ஏற்கனவே ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் தாக்குதல் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையிலேயே, சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக, கண் கண்ட சாட்சி ஒன்றின் அடிப்படையில் அவரை ஊடகவியலாளர் கீத் நொயார் விவகாரத்தில் சந்தேக நபராக பதிவு செய்ததாக சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிமன்றுக்கு அறிவித்தார்.

இதனையடுத்து கல்கிசை மேலதிக நீதிவான் சி.எச்.வீ.லியனகே சந்தேக நபரான லலித் ராஜபக்ஷவை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அன்றைய தினம் அவரை அடையாள அணி வகுப்புக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி அறிவித்தல் விடுத்துள்ளார்.