சவேந்திரசில்வா நியமனம்! மனித உரிமை பேரவையில் முக்கிய குழு கவலை

மீண்டும் இலங்கையின் இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த முக்கிய குழு கவலையை வெளியிட்டுள்ளது

கனடா ஜேர்மனி மொன்டிநீக்ரோ வடமசெடோனியா பிரிட்டன் ஆகியநாடுகளே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இந் நாடுகளின் சார்பில் பிரிட்டனின் சர்வதேச மனித உரிமைகளிற்கான தூதுவர் ரிட்டா பிரென்ஞ் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவித்து இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கின்றதாக ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட கரிசனையினை பகிர்ந்துகொள்வதாக பிரிட்டனின் மனித உரிமைகளிற்கான சர்வதேச தூதுவர் ரிட்டா பிரென்ஞ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியல்வெளி மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பது என்ற தனது வாக்குறுதி குறித்து இலங்கை நம்பிக்கையை ஏற்படுத்துவதானது அமைதி மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றிற்கு அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற மோசமான மீறல்களிற்கு தீர்வை காண்பதற்கான அவசியமான பங்களிப்பை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை வழங்கியுள்ளபோதும், இந்த பங்களிப்பு இன்னமும் முழுமையற்றதாக காணப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நிலையான சமாதானம் நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கிய தனது பயணத்தை தொடரும் இவ்வேளையில் மனித உரிமை பேரவையும் சர்வதேச சமூகமும் தொடர்ந்தும் இலங்கைமீது அவசியமான கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம் எனவும் ரிட்டா பிரென்ஞ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சில முக்கிய உள்ளுர் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளபோதும் இந்த விடயத்தில் காணப்படும் முன்னேற்றங்கள் மெதுவானதாகவே காணப்படுகின்றதாகவும் அவர் மேலும்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.