வெளிப்புற காலக்கெடுக்கள் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது! சேனுக்கா செனிவிரட்ண

யுத்தத்திற்கு பிந்திய நிலைமாற்றுகால நீதி நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்கான வெளிப்புற காலக்கெடுக்கள் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை தெரிவித்துள்ளது.

இதனை ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற பகிரங்க கூட்டமொன்றில் உரையாற்றிய ஐநாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சேனுக்கா செனிவிரட்ண கூறியுள்ளார்.

நிலைமாற்றுக்கால நீதி தொடர்பான நடவடிக்கைகளை பூர்த்திசெய்வதற்காக விதிக்கப்படும் வெளிப்புற காலக்கெடுக்கள் நல்லிணக்க முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் யதார்த்த நிலைமையை கருத்தில்கொள்ளாமல் அவ்வாறான காலக்கெடுக்கள் விதிக்கப்படுவதே இதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமாற்றுக்கால பொறிமுறை குறித்த கருத்துக்களை முன்வைக்கும்போது வரலாற்று கலாச்சார மத உணர்வுகளை கருத்தில்கொள்ளவேண்டும் என இலங்கையின் ஐநா பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பலநாடுகளால் பயங்கரவாதிகள் என பட்டியலிடப்பட்ட, சில நாடுகளால் ஈவிரக்கமற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டபயங்கரவாத அமைப்பிற்கு எதிராக இலங்கையின் பாதுகாப்பு படையினர் முன்னெடுத்த நடவடிக்கை குறிப்பிட்டஒரு சமூகத்திற்கு எதிரானது அல்ல எனவும் சேனுக்கா செனிவிரட்ண இதன்போது தெரிவித்துள்ளார்.

சமீபகாலவரலாற்றில் பொதுமக்களை வேண்டுமென்றே இலக்குவைத்து பயங்கரவாத குழு மேற்கொண்ட தற்கொலைகுண்டு தாக்குதல்களை தற்போது சர்வதேச அளவில் ஏனைய குழுக்களும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சமாதானம்,நியாயம் நல்லிணக்கம் நிலவும் சமூகத்தை உருவாக்குவது எவரையும் கைவிடாத ,நிலைபேற்று, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவசியம் எனவும் தெரிவித்த சேனுக்கா செனிவிரட்ண , இறைமையுள்ள நாடு என்ற அடிப்படையில் இலங்கை இது தொடர்பான தனது முன்னுரிமைகளை தானே உருவாக்கும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.