ஆளுநரின் அறிவிப்பால் தடுமாற்றமடைந்துள்ள தமிழர் பகுதி

முல்லைத்தீவில் பிரபல பாடசாலைகள் சில வடமாகாண ஆளுநரின் விடுமுறை அறிவிப்பால் தடுமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இன்று சில பாடசாலைகள் இயங்கியுள்ளதாக பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் குறித்த பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு வினவியபோது அவர் தெரிவித்ததாவது,

முல்லைத்தீவு வலயக்கல்வி பணிமனையில் இருந்து இன்று பாடசாலை விடுமுறை என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால் வடமாகாணத்தில் பாடசாலைகள் விடுமுறை என்ற ஆளுநரின் அறிவிப்பு ஊடகங்களின் ஊடாக எமக்கு கிடைத்ததை அடுத்து முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிமனைக்கு தொடர்பு கொண்டு குறித்த விடுமுறை தொடர்பில் வினவினோம்.

அதற்கு அவர்கள், அதிபரின் துணையுடன் பாடசாலை மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப முடியும் என பதில் அளித்திருந்தனர்.

இருந்தபோதிலும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து, பாதுகாப்பு கருதி மாணவர்களை உடனடியாக பாடசாலையில் இருந்து விடுவிக்க முடியாதுள்ளது என்று குறித்த பாடசலையின் அதிபர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை பாடசாலை விடுமுறை என்று அறிந்த பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து செல்வதற்காக பாடசாலைகளுக்கு சென்று காத்துநிற்பதை அவதானிக்க முடிகின்றது.

முல்லைத்தீவில் கஜா புயலின் தாக்கம் உணரப்படலாம் என அறிவிக்கப்பட்ட கடந்த இரண்டு நாட்களிலும் எவ்வித பதற்றமும் இல்லாமல் மாணவர்கள் பரீட்சையில் தோற்றியதாக பாடசாலை சமுகம் தெரிவித்திருந்தது.

மேலும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் அனைத்திலும் இன்று பரீட்சைகள் எதுவும் நடைபெறாது என வலயக்கல்விப் பணிமனை தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.