தமிழர்களின் எதிர்கால அரசியலை நிர்ணயிக்கின்ற தேர்தல்

இத்தேர்தலானது உள்ளூர் அபிவிருத்திகளுக்கும் மேலாக தமிழர்களின் தலைவிதியையும் எதிர்கால அரசியலையும் நிர்ணயிக்கின்ற தேர்தலாக அமை உள்ளதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் யோ.ரஜனி மற்றும் கயசீலன் ஆகியோரின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் பாலையடிவட்டை, கூழாவடியில் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை பொறுத்தவரை உள்ளுர் உட்கட்டமைப்புகளான மயானம், மைதானம், வீதிகள், சிறுசுகாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்கின்ற தேர்தலாகவே இது அமைகின்றது.

ஆனால் இம்முறை நடைபெறவிருக்கின்ற தேர்தலானது உள்ளூர் அபிவிருத்திகளுக்கும் மேலாக தமிழர்களின் தலைவிதியையும் எதிர்கால அரசியலையும் நிர்ணயிக்கின்ற தேர்தலாகவும் இத்தனை காலமும் போராடியதன் விளைவை பெற்றுக்கொள்கின்ற தேர்தலாகவும் அமையவிருக்கின்றது.

மக்களின் ஆணையை பெற்று கடந்தகால இழப்பிற்காக ஒரு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்கின்ற தேர்தலாக இத்தேர்தல் இருக்கின்றது.

அந்த வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது இன்று தமிழ் மக்களின் ஆணையை வேண்டி நிற்கின்றது.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவில்லை. இந்த நாட்டிலே சிங்களம் மட்டும் என்ற சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டதோ அன்றே தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டார்கள்.

அதற்கான தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்காக கடந்த காலங்களில் பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் என இரு ஒப்பந்தங்கள் பெரும்பான்மை கட்சிகளுடன் செய்து கொள்ளப்பட்டது.

அந்த வேளையில் பெரும்பான்மை கட்சிகள் அதனை எதிர்தததன் மூலமாக அவை கிழித்தெறியப்பட்டன. அதன் காரணமாகவே நாங்கள் இன்று இத்தனை இழப்புகளையும் தாங்கிக்கொண்டு இந்த நிலையிலிருக்கின்றோம்.

இந்த நாட்டில் நாங்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழமுடியாது. எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது, எங்களுடைய பிரதேசத்தினுள் அந்நியன் வந்து குடியேறுகின்றான் என்ற காரணத்தினாலே எமக்கு தனி நாடு வேண்டும்.

தனிஈழம் வேண்டும் என போராடிய நாம் ஆகக் குறைந்தபட்சம் இணைந்த வடகிழக்கிலே சகல அதிகாரங்களும் கொண்ட ஒரு கட்டமைப்பை காணி, பொலிஸ் அதிகாரங்கள் கொண்ட ஒரு சுயாட்சியை உருவாக்க முடியாவிட்டால் நாங்கள் இறந்த அந்த ஆத்மாக்களுக்கு செய்யும் துரோகமாகவே அது அமையும் என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்தில்கொண்டு செயற்படுகின்றது என்றார்.