3 வாக்காளா்களுக்காக தனியான வாக்கெடுப்பு நிலையம்!

மட்டக்களப்பு- மாந்தீவு பகுதியில் 3 வாக்காளா்களுக்காக தனியான வாக்கெடுப்பு நிலையம் ஒன்றை அமைக்க தோ்தல்கள் ஆணைக்குழு தீா்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்ற மூவருக்காகவே குறித்த வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

அத்துடன் அவர்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் வரும் 15ஆம் திகதி மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் வழங்கல் பிரிவில் இருந்து எடுத்து சென்று வவூணதீவு வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து மறுநாள் மாந்தீவுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளன.

மாந்தீவுக்கு இயந்திரப்படகு மூலமாக வாக்கு சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்டு தேர்தல் நாளில் காலையிலிருந்து மாலை 5மணி வரையும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாவட்டத்தில் மிகவும் வாக்காளர் குறைந்த வாக்கெடுப்பு நிலையமாக இந்த வாக்களிப்பு நிலையம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.