வளி மாசடைவினால் ஏற்பட்ட தாக்கங்கள் குறைந்துள்ளது -மத்திய சுற்றாடல் அதிகாரசபை

நாட்டின் வளிமண்டலத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த மாசடைவு மற்றும் அதனால் உண்டான தாக்கங்கள் தற்போது குறைந்திருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன் வளிமண்டலத்தில் காணப்படும் சிறுதுகள்களின் அளவில் சடுதியாக ஏற்பட்ட அதிகரிப்பு மீண்டும் குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் உயர்மட்டத்தில் ஏற்படும் அதிக காற்றழுத்தத்தினாலும், வாகனப்பயன்பாட்டினால் சூழலுக்கு வெளிவிடப்படும் திரவியங்கள் மற்றும் வேறுசில காரணிகளாலும் இந்நிலைமை ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறிய மத்திய சுற்றாடல் அதிகாரசபை, இந்த மாசடைவிற்கான பிரதான காரணத்தை அடையாளங்காணுவது கடினமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை இந்த அசாதாரண நிலை குறித்து உரிய நிறுவனங்களுடன் தொடர்பினைப்பேணி வருவதுடன், அவ்வப்போது மக்களைத் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திக் பணிப்பாளர் நாயகம் டிபிள்யூ.ஏ.தர்மசிறி கூறியுள்ளார்.

மேலும் இந்த மாசடைவின் காரணமாக சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் மற்றும் சுவாசநோய்களால் பாதிக்கப்பட்டிருப்போர் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு வலியுறுத்தி உள்ளது.

அத்துடன் பொதுமக்கள் அமைச்சினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தர்மசிறி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தற்போது ஏற்பட்டிருக்கும் வளிமண்டல மாசடைவைக் குறைப்பதற்கு ஒவ்வொருவரும் தம்மாலான பங்களிப்பை வழங்கும் விதமாக சூழலுக்கு நேயமான விதத்தில் செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.