கொரோனா வைரசின் உக்கிர தாக்கம்! அலட்சியமாக இருந்து விடாதீர்கள்! இத்தாலியரின் கலங்கை வைக்கும் ட்விட்டர் பதிவு

நீங்கள் இன்னும் நண்பர்களுடன் வெளியில் சுற்றிக்கொண்டு ஒன்றுமே நடக்காதது போல் நடித்துக் கொண்டிருந்தால் தயவுசெய்து நிறுத்துங்கள்.

வருவது என்ன என்று இன்னும் உங்களுக்கு விளங்கவில்லை.

கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து இத்தாலி நாட்டில் குவாரண்டைன் (தனிமைப் படுத்தல்) இருப்பதை அறிவீர்கள்.

இங்கு நிலைமை மோசமாக உள்ளது. ஆனால் அதை விடக் கவலை தருவது உலகின் இதர நாடுகள் தமக்கு எதுவும் நடக்கபோவதில்லை என்பது போல் இருப்பது தான்.

நீங்கள் நினைப்பது என்ன என்று எங்களுக்குத் தெரியும். நாங்களும் அப்படித்தான் இருந்தோம்.

இன்றைய நிலைக்கு நாங்கள் எப்படி வந்தோம் என்பதை இங்கு விவரிக்கிறேன்.

முதல் நிலை:

கொரோனா வைரஸ் இருப்பதை அறிகிறோம். முதல் சில நபர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கவலைப்பட எதுவுமில்லை. இதுவும் ஒருவித காய்ச்சல் தான்.

நான் 75+ வயதுக்கு மேல் இல்லை. எனக்கு என்ன நடந்துவிடும்? நான் பாதுகாப்பாக உள்ளேன். அனைவரும் அதிகப் படியாக பயப்படுகிறார்கள்.

2ஆம் நிலை:

பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதிகமாக பாதிக்கப்பட்ட ஓரிரு பகுதிகள் சிவப்பு பகுதிகளாக அறிவிக்கப் படுகின்றன. அவ்விடங்கள் தனிமைப் படுத்தப் படுகின்றன.

இது கவலைக்குரியது தான். ஆனால் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. எனவே பயப்படத் தேவையில்லை.

சில மரணங்கள் நிகழ்கின்றன. ஆனால் அவர்களெல்லாம் வயதானவர்கள். ஊடகங்கள் தேவையில்லாமல் பயத்தைப் பரப்புகின்றன.

மக்கள் எப்போதும்போல் வாழ்க்கையைத் தொடர்கின்றனர். நானும் கூட்டமான இடங்களுக்குச் செல்வதை நிறுத்தப் போவதில்லை. எனக்கு எதுவும் நடக்காது.

3ஆம் நிலை:

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென்று உயர்கிறது. ஒரே நாளில் இரட்டிப்பாகிறது. உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.

இத்தாலியின் 25% தனிமைப் படுத்தப்படுகிறது. பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப் படுகின்றன. ஆனால் மதுக்கடைகளும் அலுவலகங்களும் உணவகங்களும் திறந்துள்ளன.

ஒரே இரவில் பத்தாயிரம் பேர் சிவப்பு அபாயப் பகுதிகளில் இருந்து தப்பி தமது சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுகின்றனர். (இதன் முக்கியத்துவத்தைப் பின்னால் சொல்கிறேன்)

இத்தாலியின் மீதி 75% பகுதியில் உள்ள மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவில்லை.

அவர்கள் இன்னும் நிலைமையின் தீவிரத்தை உணரவில்லை. திரும்பிய பக்கமெல்லாம், "கைகளைக் கழுவுங்கள்; கூட்டங்களைத் தவிருங்கள்" என்ற பிரச்சாரம் டிவியில் ஒலிக்கிறது.

ஆனால் இன்னும் இது மக்களின் மனதில் பதியவில்லை.

4 ஆம் நிலை:

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து விட்டது. தேசிய அவசர நிலை பிரகடனப் படுத்தப்படுகிறது.

மருத்துவமனைகள் நிரம்பி விட்டன. சில மருத்துவமனைகள் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்காக காலி செய்யப்படுகின்றன.

போதுமான மருத்துவர்களோ செவிலியர்களோ இல்லை. ஓய்வு பெற்ற மற்றும் கல்லூரியில் கடைசி இரண்டு ஆண்டுகளில் உள்ள மருத்துவர்கள் அழைக்கப் படுகிறார்கள்.

மருத்துவமனைகளில் இப்போது வேலை நேரம் என்று ஒன்று இல்லை. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் செய்கிறார்கள்.

மருத்துவர்களும் செவிலியர்களும் நோயுறுகிறார்கள். தங்கள் குடும்பங்களுக்குப் பரப்புகிறார்கள். மிகுதியான பேருக்கு ஐஸியு தேவைப் படுகிறது. ஆனால் இடமில்லை.

இந்த நேரத்தில் இது போர்க்களம் போல் உள்ளது.

மருத்துவர்கள் யாருக்கு உயிர்வாழ அதிக வாய்ப்புள்ளது என்று பார்த்து, அவர்களை மட்டும் காப்பாற்ற வேண்டியுள்ளது.

அதாவது, முதியவர்களும், பிற நோயாளிகளும் கவனிக்கப்படமுடியாது. ஏனெனில், கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம்.

இதெல்லாம் உண்மையில் நடக்கவில்லை என்று சொல்லவே நினைக்கிறேன். ஆனால் வார்த்தைக்கு வார்த்தை அத்தனையும் உண்மை.

மருத்துவமனைகளில் இடமின்மையால் மக்கள் மடிகின்றனர். எனது ஒரு டாக்டர் நண்பன் மனமுடைந்த நிலையில் என்னைக் கூப்பிட்டு, " இன்று நான் 3 பேரை சாகவிட்டேன்" என்று அழுகிறான்.

நர்சுகள் மக்கள் மடிவதைக் கண்டும் எதுவும் செய்ய முடியாத நிலையில் அழுகின்றனர். எங்கு திரும்பினாலும் கொரோனாவின் பேரழிவு தான்.

5ஆம் நிலை:

சிவப்பு அபாயப் பகுதியில் இருந்து தப்பி ஓடிய பத்தாயிரம் பேரை நினைவுள்ளதா?

அவர்களால் ஒட்டுமொத்த இத்தாலியும் இந்த நிலைக்கு வந்துவிட்டது. நமக்கு ஒரே வழி கொரோனா மேலும் பரவுவதைத் தள்ளிப் போடுவதுதான்.

இன்னமும் மக்கள் வேலைக்கு, மளிகைக் கடைகள், மருந்தகங்களுக்கு செல்லலாம். வியாபாரம் இன்னும் நிறுத்தப் படவில்லை. ஏனெனில் பொருளாதாரம் சரிந்துவிடும். ஆனால் காரணமின்றி ஊரை விட்டு செல்லமுடியாது. இப்போது மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

ஆனாலும் ஒரு சிலர் தனக்கு எதுவும் நேராது என்ற நினைப்பில், நண்பர்களுடன் உல்லாசமாகத் திரிகிறார்கள்.

6 ஆம் நிலை:

2 நாட்களுக்குப் பிறகு - சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மருந்தகங்கள் தவிர அனைத்து வியாபாரங்களும் நிறுத்தப் படுகின்றன.

சான்றிதழ் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல முடியும்.

எல்லா இடங்களிலும் போலீஸ் சோதனைகள்... காரணமின்றி வெளியில் மாட்டினால், €206 வரை அபராதம். இப்படி மாட்டுபவர் கொரோனா நோயாளியாக இருந்தால் 1-15 ஆண்டுகள் சிறை.

முடிவுரை:

மேற்கூறிய அனைத்தும் கடந்த இரண்டு வாரங்களில் (மார்ச் 12 க்குள்) நடந்து முடிந்தவை.

நீங்களும் ஓரிரு வாரங்கள் மட்டுமே பின்தங்கி உள்ளீர்கள். இதெல்லாம் உங்களுக்கும் நடக்கத்தான் போகிறது.

எங்களைப் போல் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

loading...