பயங்கரவாத அச்சுறுத்தல்! உசார் நிலையில் பிரான்ஸ்

ஸ்பெயினில் இடம்பெற்றிருந்த இரட்டை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பிரான்சில் உச்சக்கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பினரது சுற்றுக்காவல் நடவடிக்கைகள் தீவிரம் ஆக்கப்பட்டுள்ளதோடு, நாடு முழுவதும் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை தெற்கு பிரான்சின் மத்திய Nimes தொடருந்து நிலையத்தினுள் ஆயுதத்துடன் புகுந்த நபரினால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்களை முற்றாக காவல்துறையினர் வெளியேற்றினர்.

மூன்று நபர்கள் ஆயுதங்களுடன் உட்புகுந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த போதும், ஒருவரே இவ்வாறு உட்புகுந்ததாக காவல்துறையினர் பின்னர் உறுதிப்படுத்தியிருந்தோடு, குறித்த நபரினை கைது செய்தனர்.

இதேவேளை மற்றுமொரு இடத்தில் கத்தியுடன் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்க வந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Loiret பகுதியில் காவல்துறை அதிகாரியை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி இருந்ததோடு அவ்வதிகாரியை நோக்கி குறித்த நபர் நெருங்கிய வேளை, சுட்டுக் கொல்லப்பட்டதாக மாவட்ட ஆட்சியகம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.