ஆயிரக்கணக்கில் செத்து கரை ஒதுங்கும் மீன்கள்! பேராபத்தின் அறிகுறியா??

இராமநாதபுரம் மாவட்டம், ஆற்றங்கரை கிராமப் பகுதியில் நதிப் பாலத்திலிருந்து தேவிபட்டினம் வரையிலான கடற்கரை ஓரங்களில் பல ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.

இதேபோல், கடந்த 9-ஆம் தேதி, வைகை ஆற்றுநீர் கடலில் கலக்கும் ஆற்றங்கரை கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.

இதுகுறித்து இராமநாதபுரம் கோட்டாட்சியர் பேபி, வட்டாட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

இதுகுறித்து, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாவட்டச் செயலர் எம்.கருணாமூர்த்தி கூறியது: பல ஆயிரக்கணக்கான மீன்கள் அடிக்கடி கடலில் செத்து மிதப்பது, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். இதற்கு முக்கிய காரணம், கடற்கரை ஓரங்களில் செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளிலிருந்து வெளியாகும் ரசாயனக் கழிவுகளே.

இதற்கு முன்பும் அதிகாரிகள் ஆய்வு செய்தார்களே தவிர, இறால் பண்ணைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார்.