500 ரூபாய்க்காக தாயை அடித்துக்கொன்ற மகன்..!

திருவண்ணாமலை அருகே கடலாடி மட்டவெட்டு கொல்லக்கொட்டாயை சேர்ந்தவர் ரேணு. இவரது மனைவி சந்திரா (வயது 63). இவர்களது மகன் ஹரிக்குமார் (33). விவசாயி. இவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் நிலத்திலேயே வீடு கட்டி வசித்து வந்தனர். கணவர் ரேணு இறந்து விட்டதால் சந்திரா அவரது மகனின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்துள்ளார். ஹரிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு தாய் சந்திராவிடம் 500 ரூபாய் பணம் கேட்டு ஹரிக்குமார் தொந்தரவு செய்துள்ளார். சந்திரா பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் தாய் என்றும் பார்க்காமல் அவரை தாக்கி கீழே தள்ளியுள்ளார்.

பின்னர் வீட்டுக்கு முன்னாள் கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து சரமாரியாக தாயை தாக்கியுள்ளார். இதில் சந்திரா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியாகியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த கடலாடி பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலைசெய்யப்பட்ட சந்திராவின் உடலை மீட்டு பிரேதப் பரிசாதனைக்காக திருவண்ணாமலை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்திய ஹரிக்குமாரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.